கணவர் என்னை விட குழந்தை மீது அதிகம் பாசம் காட்டுகிறார்: பெற்ற குழந்தையை கொன்ற தாய்

இந்தியாவில் என்னை விட கணவர் குழந்தையிடம் அதிகம் பாசமாக இருக்கின்றார் என்று பிறந்த 1 மாத குழந்தையைக் கொடூரமாக தாய் கொலை செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் விஜயா கார்டன் பகுதியில் வசிக்கும் ரமேஷ் (வயது – 25), சத்யா (வயது – 22) என்கிற தம்பதிக்கு சமீபத்தில் 8 மாதம் நிறைவடையாத ஆண் குழந்தை பிறந்து சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் நேற்று முன் தினம் வெள்ளிக் கிழமை இடம்பெற்ற தீ மிதி திருவிழாவில், ரமேஷ் தீச்சட்டி வேண்டுதலுக்காக கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதன் போது சத்யா குழந்தையை உறவினர்களிடம் கொடுத்து விட்டு கோவிலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய நிலையில் குழந்தை காணவில்லை என அலறி துடித்துள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொலிஸார் அருகில் உள்ள கிணற்றில் குழந்தையை சடலமாக மீட்டதை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் போது அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த வேளை குழந்தையை மறைத்து வைத்திருந்த தாய் சத்யா, கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து சோழவரம் பொலிஸார் சத்யாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, “ குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை எடை குறைவாக உள்ளது,  இதனால் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளியாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. மேலும், எனக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை, இதையெல்லாம் தாண்டி என் கணவர் என்னை விட குழந்தை மீது அதிக பாசம் காட்ட ஆரம்பித்தார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றேன்,” என தாய் சத்யா தெரிவித்தார்.

இதனையடுத்து தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.