கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் இனம் காணப்பட்டுள்ளது

 

-அம்பாறை நிருபர்-

கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கதிரவேல் பத்மராஜ் (வயது – 59) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அவரது மனைவி வசந்தி அடையாளம் காட்டியுள்ளார்.

மரணமடைந்தவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக தெரிவித்து வெளியே சென்றதாகவும், சடலமாக மீட்கப்படும் வரை தேடியும் கிடைக்காததினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் பின்னர் கல்முனை பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது என்பதை அறிந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சென்று அங்கே பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் தனது கணவர் தான் என்பதனை உறுதிப்படுத்தியதாகவும் மரணமடைந்தவரின் மனைவி தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.