கடனில் இயங்கும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு

-கிளிநொச்சி நிருபர்-

பல இலட்சம் ரூபா கடனில் இயங்கும் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு  வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் தலைவர் சிவலிங்கம் சிறிகலாதன் தலைமையில் காலை 11:00 மணியளவில் இடம் பெற்றது.

இதில் புதிய தலைவராக த.தங்கரூபன் தெரிவு செய்யப்பட்டதுடன் அவருடன் சேர்த்து ஆறு இயக்குநர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த காலங்களில் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் இடம் பெற்றதாக சொல்லப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பொதுச்சபை உறுப்பினர் இ.முரளீதரன் தலமையில் ஐவர் கொண்ட விசாரணை குழுவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சிக்கு தடையாகவும், இவ்வளவு கடன் ஏற்பட காரணமாகவும் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களமே இருந்ததாகவும் இங்கு கருத்து தெரிவித்த பலரும் கூட்டுறவு திணைக்களம் மீது குற்றம் சாட்டியதுடன் 2010 ம் ஆண்டு
பொதுச்சபையை கூட்டி முடிவு எடுக்காது தன்னிச்சையாக ரூபா 9600000 (தொண்ணூற்று ஆறு இலட்சம்) நிதி யாழ் மாவட்ட பரந்தன் மக்கள் வங்க
கிளையில் மீளப்பெறப்பட்டு அவை நுகர்சிக்கும் பயன்படுத்தியமை ஒரு முறையற்ற நிதி முகாமைத்துவம் என்றும், பொதுச்சபையை கூட்டாமல் கூட்டுறவு திணைக்கள நியமன இயக்குநர்கள் நிதியை மீளப் பெற்றுக்கொண்டு செயற்படுத்தியமை ஒரு ஜனநாயக விரோத செயல் என்றும் பலரும் சுட்டிக்காட்டினர்.

அதே வேளை தற்போது 4000000 (நாற்பது இலட்சம்) கடன் சங்கத்தின் பெயரில் உள்ளதாகவும், இதனால் சங்கத்தின் காணி ஒன்றினை விற்பனை செய்து அதனை மீள செலுத்துவதற்கும் பொதுச்சபை அனுமதியளித்துள்ளது.

இருபதுக்கு மேற்பட்ட கடைகளை கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கம் தற்போது ஒரேயொரு கிளையுடன் இயங்குவதாகவும் பணியாளர்களுக்கு பதின்நான்கு மாதங்கள் சம்பளம் வழங்காத நிலையிலேயே பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.