ஏப்ரல் 30 வரை நுவரெலியா வசந்தகாலம்
நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடாத்தப்படும் ஏப்ரல் வசந்தக்கால கொண்டாட்டங்கள் இம் முறை கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இம்மாதம் முழுவதும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த முதலாம் திகதி பாடசாலை மாணவ மாணவிகளின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் நுவரெலியா மாநகரசபை முதல்வர் சந்தனலால் கருணாரட்ன மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஆகியோர் ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.
ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா பொது மைதானத்தில் கிரிக்கெட், கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டம் போட்டிகளும், மாநகர விளையாட்டு உள்ளரங்கில் மேசை பந்து (டேபல் டெனிஸ்) பூப்பந்தாட்டம் (பெட்மிடன்) மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகளும் நடைபெறும் என தெரிவிக்ககப்பட்டுள்ளது.
நுவரெலியா குதிரைப்பந்தய திடலில் எதிர்வரும் 15, 23 ஆம் திகதிகளில் குதிரைப்பந்தயப் போட்டிகளும், அதனை சுற்றியுள்ள பிரதான பாதையில் வருடம் தோறும் நடைபெறும் மோட்டார் காரோட்டப் போட்டியும் நுவரெலியா கிறகறி வாவியில் நடைபெறும் படகோட்டப் போட்டியும் இம்முறை நடைபெறாது, கிறகறி வாவிக் கரையில் எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் 4 * 4 ஜீப் ஓட்டப் போட்டியும் மோட்டர் குரோஸ் மோட்டர்சைக்கள் ஓட்டப்போட்டி எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.
நுவரெலியா விக்டோரியா பூங்காவில் எதிர்வரும் 17, 18 ஆம் திகதிகளில் மலர் கண்ககாட்சி போட்டி நடைபெறும், தினந்தோறும் காணிவேல் களியாட்ட நிகழ்வுகள் நுவரெலியா பொது விளையாட்டு மைதானத்திலும் நுவரெலியா கிறகறி வாவிக் கரையிலும் நடைபெறும். தினசரி இசை நிகழ்ச்சிகள் உட்பட பல றிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.