எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

தற்போது கிடைத்துள்ள எரிபொருளுக்கு மேலதிகமாக விமான எரிபொருள் மற்றும் மற்றுமொரு தொகை டீசல் என்பன தரையிறக்கப்பட்டுள்ளன. போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளதால் விநியோகத்துக்கு இடையூறு விளைவிக்காமல் நாட்டுக்கு ஆதரவளிக்குமாறு வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் இருந்தாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட 120,000 மெட்ரிக் டன் நிலக்கரிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதை அடுத்து அதனை இறக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

தற்போதுள்ள நிலக்கரி மற்றும் புதிதாக பெறப்பட்ட இருப்புகளை கொண்டு 810 மெகாவாட் கொண்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை உச்ச செயற்திறனுடன் இயக்குவதற்கு போதுமானது .

நாடு பூராகவும் எரிபொருளை முறையாக விநியோகிப்பதற்கு, தற்போது ஆங்காங்கே நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களும் வீதி மறியல் போராட்டங்களும் பாரிய தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசிய எரிபொருட்கள் விநியோகம் தடைப்படும் போது மருத்துவமனைகளில் உள்ள மின்பிறப்பாக்கிகளை கூட இயக்க முடியாமல்போகும் என்பதால், மக்களின் உயிர் காக்க அத்தியாவசியமான எரிபொருட்களை விநியோகிப்பதில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வலுசக்தி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.