
என்னுடைய கூற்றை ஏனைய கட்சிகள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் – ஜனாதிபதி தெரிவிப்பு!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது சமீபத்திய கருத்துகள் எதிர்க்கட்சிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
இன்று சனிக்கிழமை கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மத்திய அரசால் கவனமாக சேகரிக்கப்படும் நிதி ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படாது என்று மட்டுமே தான் கூறியதாகவும், தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள சபைகளுக்கு மட்டுமே நிதி வழங்கப்படும் என்பது அதன் அர்த்தம் அல்ல என்றும், தெளிவுபடுத்தினார்.
உள்நாட்டு வருவாய்த் துறை மற்றும் சுங்கத் துறையை நெருக்கமாகக் கண்காணித்தல் மூலம், திறைசேரியில் பணத்தை நாங்கள் சேகரித்துள்ளோம், கவனமாக சேகரிக்கப்பட்ட அந்தப் பணத்தை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒப்படைக்க முடியாது, என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மத்திய அரசு பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்ப்பது போல, உள்ளூராட்சி மன்றங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மத்திய அரசு திருடாமல், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்ந்து திருடும்போது என்ன நடக்கும்? மத்திய அரசு வீண்விரயத்தைத் தவிர்க்கும் அதே வேளையில், பிரதேச சபைகள் பணத்தை வீணாக்குகின்றன.
மத்திய அரசு தனது கடமைகளைச் செய்கிறது, ஆனால் உள்ளூராட்சி மன்றங்கள் மக்களை துன்பத்தில் தள்ளுகின்றன, மக்களின் பணத்தை நாம் ஏன் தெரிந்தே அத்தகையவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்?, என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசால் கவனமாக சேகரிக்கப்பட்ட நிதி – மக்களின் பணம் – பிரதேச சபைகளுக்கோ அல்லது நகர சபைகளுக்கோ தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக ஒப்படைக்கப்படாது, என்பதை தனது அறிக்கை தெளிவாகக் கூறுவதாக, ஜனாதிபதி அறுரகுமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தினார்.