உணவு ஒவ்வாமையால் 31 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்-

 

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவு ஒவ்வாமை காரணமாக தரம் 3,4,5 கல்வி பயிலும் மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலை தொடர்ச்சியாக உணவு வழங்கும் செயற்பாடு முன்னெடுத்து வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாணவர்களிற்கு வழங்கப்பட்ட பகல் உணவு ஒவ்வாமைக்கு காரணமாக உணவருந்திய வேளை மாணவர்கள் மயக்கமுற்று, வயிற்று வலி, வயிற்றோட்டம் குமட்டல் மற்றும் வாந்தி போடும் செயற்பாடு காரணமாக உணவருந்தியவர்களில் சுமார் 31 மாணவர்கள் வயிற்று வலி உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

மொத்தமாக 105 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் அதில் 31 மாணவர்கள் வயிற்றுவலிக்கு ஆளானதை தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் சாப்பிட்ட உணவின் பகுதிகளையும், மாதிரிகளையும் பரிசோதனைக்காக நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் .