ஈழத்தமிழர்களுக்காக சுதந்திரமான பொது வாக்கெடுப்பிற்கு வழிகோலுமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்-

கடந்த செவ்வாய்க்கிழமை வோசிங்ரன், டி.சி – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அரச சட்டசபை உறுப்பினர்களையும் மாநிலத்திணைக்கள அதிகாரிகளையும் வோசிங்டன் டி.சி.யில் சந்தித்துக் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,  இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார சூழல்பற்றி விளக்கமளித்ததோடு, தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுதந்திரமான பொதுவாக்கெடுப்பு ஒன்றே பொருத்தமானது என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதேவேளை, பல்லாயிரக்கணக்கான மக்களின் இறப்பிற்கு வழிவகுத்த 30 ஆண்டுகால இனவிடுதலைப்போர் மௌனிக்கப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அப்போருக்கான அடித்தளமாக இருந்த ஈழத்தமிழ் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

காலம் காலமாக இலங்கை அரசியல் அதிகாரபீடங்களுக்கு வந்த அனைத்து சிங்கள தலைமைத்துவங்களும் தமது அரசியல் கட்சிகள் எவையாயினும், எப்போதுமே தமிழர்களுக்கெதிராகவே செயற்பட்டிருந்ததோடு அவர்களில் ஒரு சிங்களத் தலைவரேனும் தமிழர்களுக்கு முழு உரிமைகளையும் வழங்க முன்வந்திருக்கவில்லை.

அதனடிப்படையில் இலங்கையின் தற்போதைய வளர்ச்சி நிலையில், அப்பிராந்தியத்திற்கு அமைதியையும் திடத்தன்மையையும் கொண்டுவரக் கூடியதொரு பொதுவாக்கெடுப்பினை ஜனநாயகரீதியாகவும் அமைதியாகவும் நடாத்துவதன் மூலம், தமிழர்கள் ஒரு பூர்வீக தேசிய இனத்தவர்கள் என்ற அங்கீகாரத்தோடு, வடக்கு, கிழக்குப் பிராந்தியங்கள் தமிழர்களின் மரபுவழித் தாயகம் என்ற அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வைப் பெற்றுத்தருவதற்கு காத்திரமான பங்களிப்பை வழங்குமாறு அமெரிக்காவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

குறித்த கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்புக்காக குரல்கொடுத்துவரும் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கலந்துரையாடலின் போது, ஈழத்தமிழர்களின் நலன்கருதி, அமெரிக்க அரசு கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்ற கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்வைத்துள்ளார்.

1. 1948 இற்கு முன்பிருந்தே இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களது வழித்தோன்றல்களுக்காகவும், தமது தாய்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடையே ஜனநாயகரீதியாகவும் அமைதியாகவும் தமது சுதந்திரத்தினைத் தீர்மானிப்பதற்காக, சர்வதேச சமூகத்தினால் கண்காணிக்கப்படும் சுதந்திரமான பொதுவாக்கெடுப்பொன்றை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது.

2. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்தி இனப்படுகொலை, மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், பகைமை மற்றும் பிரிவினைவாதக் குற்றங்களுக்கெதிராக விசாரணைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, இனப்படுகொலைக் குற்றத் தடுப்பு மற்றும் தண்டனைக்கான தீர்மானத்தின் கீழும் சித்திரவதைக்கெதிரான தீர்மானத்தின் கீழும் பகைமை மற்றும் பிரிவினைவாதக் குற்றஙக்ளின் கீழும் சர்வதேச நீதிக்கான நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையை நிறுத்தி அதற்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது.

3. இப்பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படும்வரையில் நாட்டின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஈழத்தமிழர்களை ஆட்சிசெய்யவும் அவர்களையும் அவர்களது நிலங்களையும் பாதுகாப்பதற்குமாக ஓர் இடைக்கால சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறையினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது.

4. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, பாரிஸ் கிளப், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமிருந்து இலங்கை பொருளாதார உதவியினை கோரும் வேளையில், நிபந்தனைகளற்று எந்தவொரு உதவியும் வழங்கப்படக்கூடாதென தமிழர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஐ.நா. மற்றும் UNHRC உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கான இலங்கையின் முதன்மையான பொறுப்புக்களையும் இலங்கையின் ஏமாற்று வடிவங்களையும் சர்வதேச சமூகமானது விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கைக்கான உதவிகள் எவையேனும் வழங்கப்படும்போது பின்வரும் நிபந்தனைகளை விதிக்கப்பட வேண்டும்.

இலங்கையானது நிறைவேற்றப்படாத அனைத்து UNHRC தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மீண்டும் இடம்பெறாதென்ற உத்தரவாதமாக, இலங்கை, ரோமானிய சட்டத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு இனவிடுதலைப்போரின்போது தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் குற்றஙக்ளுக்குமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்படுவதற்கும் சம்மதிக்கவேண்டும்.

தமிழர் பிராந்தியத்திலிருந்து இலங்கை இராணுவத்தினை அகற்றுதல் மற்றும் போருக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்த இலங்கை இராணுவத்தின் அளவிற்கு இராணுவப் படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது.

இடைக்கால சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறையினையும் ஈழத்தமிழர்களுக்காக சுதந்திரமான பொதுவாக்கெடுப்பினையும் ஏற்றுக்கொள்வது.

என்பவை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் மேற்படி கலந்துரையாடலின் போது, சிவஞானம் சிறீதரன்  அமெரிக்க இராஜதந்திர குழுவினருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க