இலங்கையின் கடன் கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது – சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம், இலங்கை அதிகாரிகளுடன் சாத்தியமான கடன் திட்டம் குறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த காலக் கூட்டங்களுக்கு இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வாஷிங்டனில் விஜயம் செய்யும் போது கலந்துரையாடல்கள் தொடரும் என்று ரைஸ் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2020 முதல் அந்நிய செலாவணி கையிருப்பில் 70 வீத வீழ்ச்சியை அடுத்து இலங்கை உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறுகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகள் ஐஎம்எப் ஆதரவு நிதி திட்டத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர், என்று ரைஸ்  ஐஎம்எப் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இலங்கை அதிகாரிகளுடன் அந்த நிகழ்ச்சித் திட்ட விவாதங்களை வரும் நாட்களில் தொடங்க திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் தனது புதிய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அடுத்த மாதம் வெளியிடும் போது இலங்கைக்கான அதன் முன்னறிவிப்பை புதுப்பிக்கும் என்று ரைஸ் தெரிவித்துள்ளார். ஆனால் மேலதிக விவரங்களை அவர் வழங்கவில்லை.

கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது போல், ஐஎம்எப் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ராஜபக்ச அடுத்த மாதம் வாஷிங்டனுக்கு வருவார் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் டாலர் கடனைச் செலுத்த வேண்டிய இலங்கை – ஐஎம்எப் திட்டத்தில் நுழைந்த பிறகு உலக வங்கியின் உதவியையும் நாடவுள்ளது, இந்த விடயத்தை நன்கு அறிந்த இரண்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.