இராகலைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் கள விஜயம்

இராகலை பிரதேச தோட்ட பகுதிகளுக்கு விசேட கள விஜயத்தை மேற்கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன்படி இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த கள விஜயத்தின் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட காங்கிரஸின் முக்கியஸ்தர்களான சிரேஸ்ட சட்டத்தரணி பி.இராஜதுறை, எ.பி.சக்திவேல், வேலு யோகராஜ் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய அதிகாரிகள், தோட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இதன் போது இராகலை டெல்மார் தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் அத்தோட்ட நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து இராகலைக்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் இராகலை இ.தொ.கா காரியாலயத்தில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

பின் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இராகலை மேற் பிரிவு மக்களுக்கு கட்டியமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் கந்தப்பளை பார்க் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்ட அமைச்சர் அங்கு உட்கட்டமைப்பு அபிவிருத்திகளின் குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வீடுகளுக்கான உட்கட்டமைப்பு குறைகளை தீர்க்க அபிவிருத்திகளை துரிதப்படுத்தி விரைவில் அவ் வீடுகளை மக்களுக்கு கையளிப்பது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடினார்.