இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி, இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மீனவர் பிரச்சினையை ஒரு பிராந்திய பிரச்சினையாக கருதக் கூடாது எனவும், இது ஒரு தேசிய பிரச்சினையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்திய மீனவர்கள், கைது செய்யப்பட்டு உயிரிழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள போதிலும் மத்திய அரசாங்கம் அதற்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தவறியுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க