இந்தியாவுடனாக ஒப்பந்தம் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

அண்மையில், இந்தியாவுடன் கையொப்பமிட்ட கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் என வெளியான தகவல், தவறான புரிதலாகும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

கப்பல்களை பழுதுபார்ப்பதற்காக, வருடாந்தம், வெளியிலிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக 600 மில்லியன் ரூபா செலவாகும் பின்னணியில், இந்திய அரசாங்கத்தினால் எந்தவித செலவுமின்றி, மிதக்கும் கப்பல் கட்டும் தளத்தை நிர்மாணிப்பதற்காக, அமுலாகும் யோசனை 2015ஆம் ஆண்டுமுதல் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், கடல்சார் கண்காணிப்பு, உளவு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்க டோனியர் ஆய்வகம் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையில் இந்த வசதி மற்றும் தொழில்நுட்பம் இல்லாததால், இருதரப்பு உறவுகளை அடுத்து, இந்திய அரசாங்கம், டோனியர்  கண்காணிப்பு விமானம் ஒன்றை இலவசமாக இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு, இந்திய அரசாங்கம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இலங்கையை விட 27 மடங்கு பெரிய எல்லையில், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை கொண்டுள்ளது.

இலங்கை கடற்படை முக்கிய பங்குதாரராக செயற்படுவதுடன், பல நிறுவனங்கள் இதில் இணைந்து செயல்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.