இடைக்கால அரசு என்பது புலியிடமிருந்து பறித்து நரியிடம் கொடுப்பதைப் போன்றது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சியுடன் இவ்விரு பிரேரணைகளுக்கும் கையெழுத்திட வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

தொடர்ந்துரைத்த அவர்,

சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட போது மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்னால் ஒரு சில கோரிக்கைகள் முன்மொழியப்பட்டிருந்தது .

விசேடமாக இடைக்கால அரசு என்பது புலியிடம் பறித்து நரியிடம் கொடுப்பதைப் போன்ற ஒரு செயற்பாடாகும்.

இதற்கும் நாங்கள் உடன்பாடு இல்லை மேலும் 20 கண்டிப்பாக இல்லாதொழிக்கபடல் வேண்டும்.

ஒரு நாட்டினுடைய முக்கியமான முடிவுகளை தன்னிச்சையாக ஒருவர் மேற்கொள்வதற்கு இடமளிக்க முடியாது .

இன்று இந்த நாடு எதிர்கொண்டிருக்கின்ற அனைத்து பிரச்சினைக்கும் மிக முக்கிய காரணம் 20-வது சீர்திருத்தமே.

ஆகவே 20வது அரசியல் சீர்திருத்தத்தை இல்லாதொழித்து ஒரு சில மாற்றங்களுடன் 19வது அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .

கடும் மழையில் இனம் மதம் மொழி பேதமின்றி முழு நாடுமே உரக்கக் கூறும் ஓர் விடயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக முக்கியமாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செவிசாய்த்து அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையிலும் கையெழுத்திட வேண்டும், என தெரிவித்துள்ளார்.