இடமாற்றங்களை தடுக்க அரசியல்வாதிகளை நாடும் ஆசிரியர்கள்
-கிளிநொச்சி நிருபர்-
யாழ் மாவட்டத்திலுள்ள தீவகம் தவிர்ந்த 4 வலயங்களிலும் சுமார் 900 ஆசிரியர்கள் இதுவரை வெளி மாவட்டங்கள் செல்லாமல் யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் சேவை ஆற்றுவதாக அறியக் கிடைத்துள்ளது.
யாழ் வலயம், வலிகாமவலையம் தென்மராட்சி மற்றும் வடமராட்சி வலயங்களிலேயே குறித்த ஆசிரியர்கள் தொடர்ச்சியாக வெளி மாவட்டங்கள் செல்லாமல் கடமையாற்றி வருகின்றனர்.
தற்போது ஆசிரியர் இடமாற்றத்திற்கு வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு வருகை தருவதாக சுமார் 274 பேர் வரை பணி இடமாற்றம் கோரி விண்ணப்பம் செய்திருப்பதாக அறிய முடிகிறது.
எனினும், யாழ் மாவட்டத்திலிருந்து 7 வருடங்களைத் தாண்டியவர்களுக்கு வெளிமாவட்ட இடமாற்றம் வழங்கப்படவுள்ள நிலையில் பலர் அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் நாடத் தொடங்கியுள்ளனர்.
வெளி மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஏழு வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக உள்ளவர்கள் இதுவரை தமது சொந்த இடங்களுக்கு தற்போது திரும்புவோம் என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அவர்களின் ஆசைகள் நிறைவேறுமா? என்பதில் பல சந்தேகங்கள் எழுகின்றன.
ஏனெனில் யாழ் மாவட்டத்திலுள்ள வலயங்களில் சில பாடங்களுக்கு மேலதிகமான ஆசிரியர்கள் இருக்கும் நிலையில் அவர்களை ஒத்த பாடத்திற்கு வருகை தரும் ஆசிரியர்களை கடமைக்கு அமர்த்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
ஆகவே, ஆசிரியர் இடமாற்றம் என்பது சகலருக்கும் பொதுவாக காணப்படுகின்ற நிலையில், அரசியல் அழுத்தங்களின் அடிப்படையிலோ அல்லது அதிகார வர்க்கங்களின் உதவியுடனோ தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்தில் பலர் தங்கியிருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும், எனவும் தெவிவிக்கப்படுகிறது.