அரசாங்கம் என்ற ரீதியில் எமது பொறுப்புக்களில் இருந்து விடுபட முடியாது – பிரதமர்

அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்தை சரியான நேரத்தில் திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியில் அமுலாக்குவது குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடிய மிக சரியான தீர்வாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அன்றாடம் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய வலியை அறிந்து, இந்த நிலையைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொள்கிறோம். 24 மணி நேரத்துக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும், உங்களை இனிமேலும் நாங்கள் வரிசையில் காத்திருக்க வைக்க மாட்டோம்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சபையின் உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நமது நாட்டின் வரலாற்றில் நீண்ட காலமாக எதிர்கொண்ட பொருளாதார சவால் தற்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரசு தன் மக்களுக்கு ஒருபோதும் மனமுவந்து கஷ்டங்களை ஏற்படுத்தாது.

ஆனால், இந்நாட்டு மக்கள் இன்று பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு நெருக்கடி ஆகியவை நம் கண்களுக்கு புலப்படும் சிரமங்களாகும். இதன் காரணமாக இன்று மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதை நான் அறிவேன்.

இந்த நெருக்கடியை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. மக்கள் எம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை உண்மையாக நேசிப்பவர் யார் என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எமது பொறுப்புகளில் இருந்து விடுபட முடியாது, இந்த நெருக்கடியை போக்குவதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக முன்வைக்க வேண்டும் என்றார்.