
அனுராதபுரம் வைத்தியர் விவகாரம்: சந்தேக நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று புதன்கிழமை காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் மற்றும் 45 சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வைத்தியரை பலாத்காரம் செய்த பின்னர், சந்தேக நபர் அவரது இரண்டு தொலைபேசிகளில் ஒன்றைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
வைத்தியரின் தொலைபேசி ஏதோ ஒருவகையில் இந்த சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சான்றாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இந்த சந்தேகநபர் கெக்கிராவ பகுதியில் நடந்த 4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வழக்கு ஒன்று தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம்திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக விலகியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராக பணிபுரியும் 32 வயதான பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.