Last updated on January 4th, 2023 at 06:53 am

வியட்நாமில் மீட்கப்பட்ட 151 இலங்கை குடியேற்றவாசிகள் நாடு திரும்பியுள்ளனர் | Minnal 24 News

வியட்நாமில் மீட்கப்பட்ட 151 இலங்கை குடியேற்றவாசிகள் நாடு திரும்பியுள்ளனர்

பிலிப்பைன்ஸு க்கும் வியட்நாமுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் வைத்து அண்மையில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களில் 151 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து புலனாய்வுத்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு வந்தவர்களில் 143 ஆண்களும் ஏழு பெண்களும் ஒரு குழந்தையும் அடங்குவதாக தெரியவருகின்றது.

வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸு க்கு இடையேயான கடலில் இவர்களின் கப்பல் பழுதடைந்த போது, பல குழந்தைகள் உட்பட, இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 303 பேரை வியட்நாம் கடலோர காவல்படை கப்பல்கள் கடந்த மாதம் மீட்டன.

இலங்கையர்கள் மியான்மரில் இருந்து கனடா நோக்கிச் செல்வதற்கான ஏற்பாட்டில் இவர்கள் இருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்பாமல், அகதிகளாக மூன்றாவது நாட்டில் குடியமர்த்துமாறு இலங்கையர்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்திடம் கோரிக்கை விடுத்திருந்தை குறிப்பிடத்தக்கதாகும்.