வாகன உரிமை மாற்றத்துக்கு TIN இலக்கம் அவசியம்

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் “TIN இலக்கம்” தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான சட்ட நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் புதிய வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த ஆண்டு முதல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையை மாற்றும் போதும் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள், கை உழவு இயந்திரங்கள், டிரக்டர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனப் பதிவு அல்லது உரிமை மாற்றத்தின் போது, புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு அமைப்பில் உள்ளீடு செய்தல் வேண்டும்.

இந்தச் சட்டத்தை இரு ஆண்டுகளுக்கு முன்பே அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் அது ஒத்திவைக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.