வனப்பகுதியில் வசிக்கும் எருமைகளை கொன்று இறைச்சி விற்பனை செய்யும் குழு

-பதுளை நிருபர்-

பதுளை – நமுனுகுல வனப்பகுதியில் வசிக்கும் எருமைகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்யும் வியாபாரம் நடப்பதாக நமுனுகுல பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வெட்டப்பட்ட எருமை மாட்டின் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் நேற்று திங்கட்கிழமை நமுனுகுல நகரிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கனவரல்ல பகுதியில் அமைந்துள்ள குளத்தின் ஓரத்தில் காணப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இரண்டுக்கும் மேற்பட்ட வருடங்களாக சிலர் மாடுகளை வெட்டி வருவதாகவும், கிராமத்தில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் சில மாடுகளை முதலில் கடத்திச் சென்று வெட்டி இறைச்சியை விற்று வருவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து தற்போது குறித்த குழுவினர் வனப்பகுதியில் இருக்கும் காட்டு எருமைகளை பிடித்து கொன்று வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக வனப்பகுதியில் வாழும் எருதுகள் நூற்றுக்கும் மேல் எடை கொண்டதாக காணப்படும் என தெரிவிக்கும் கிராம மக்கள், அந்த எருதுகளை விற்பனை செய்வதன் மூலம் இந்த கடத்தலில் ஈடுபடுபவர்கள் பல லட்சங்களை வருமானமாக ஈட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவின் இந்த செயலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாரிடமும் இதற்குப் பொறுப்பானவர்களிடமும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.