“மோப்ப நாய் கர்ப்பம்” பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நடந்தது எப்படி ? அதிர்ச்சியில் அதிகாரிகள் !

எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) சேர்ந்த மோப்ப நாய் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கர்ப்பமானது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், எல்லை பாதுகாப்பு தரப்பினரிடம் இது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இராணுவம், துணை இராணுவம் போன்ற படைகளைச் சேர்ந்த மோப்ப நாய்கள் கர்ப்பம் அடையக் கூடாது என்பது கட்டாய விதியாக இருக்கும் நிலையில் , இந்தியா மேகாலயா மாநிலத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

மோப்ப நாய்கள் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்தல், வெடிகுண்டுகளை கண்டுபிடித்தல், போர்க்காலங்களில் இராணுவ வீரர்களுக்கு உதவுவது போன்ற பணிகளில் இவை ஈடுபடுத்தப்படும். இதற்காக சிறு குட்டிகளாக இருக்கும் போதே அவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஜெர்மன் ஷெப்பர்டு, லாப்ரடார் உள்ளிட்ட சில வகை நாய்களே இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக, இதுபோன்ற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நாய்கள் இனப்பெருக்கம் செய்யவோ, கர்ப்பம் அடையவோ கூடாது என்பது விதி. இராணுவப் பயிற்சி பெற்ற நாய்கள் என்பதால் அவற்றுக்கு பிறக்கும் குட்டிகள், இயற்கையாகவே அந்த திறமைகளை பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. இந்தக் குட்டிகளை எதிரிகளும், தீவிரவாதிகளும் எளிதில் தவறான வழிக்கு பழக்கப்படுத்திவிடக் கூடும் என்பதால் மிகவும் பாதுகாப்பாக மோப்ப நாய்கள் கண்காணிக்கப்படும்.

மோப்ப நாய்கள் தேவைப்பட்டால் மட்டும் கால்நடை மருத்துவக் குழுவினரின் மேற்பார்வையில் , ஆலோசனையின் பேரில் மட்டுமே; இனப்பெருக்க செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

மேகாலயா மாநிலத்தில் பிஎஸ்எப் படையில் லால்சி என்ற ஜெர்மன் ஷெப்பர்டு ரக பெண் மோப்ப நாய் பராமரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் , இந்த நாய் கடந்த டிசம்பர் 5ஆம் திகதி திடீரென 3 குட்டிகளை ஈன்றது. இதை பார்த்த பிஎஸ்எப் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த நாய் கர்ப்பம் அடைந்திருந்ததையே அப்போதுதான் பிஎஸ்எப் வீரர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பலத்த பாதுகாப்பையும் மீறி மோப்ப நாய் கர்ப்பமானது எப்படி என்பது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு பிஎஸ்எப் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்த நாயை பராமரித்து வரும் 43வது பட்டாலியன் வீரர்களிடமும் இதுகுறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது, கடுமையான கண்காணிப்பையும் மீறி பிஎஸ்எப் மோப்ப நாய் கர்ப்பமானது படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.