முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக சவூதி உயர்மட்டக் குழு விரைவில் இலங்கை வரவுள்ளது

இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்கத் தாம் உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi) இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

தனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு எமது நாட்டில் இருந்து வெளியேறிச் செல்லும் அப்துல் நாசர் இன்று, முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் முதலீடு மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக சவூதி அரேபிய உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதனை ஹார்தி தெரிவித்துள்ளார்.

முதலீட்டு வலயங்களுடன் தொடர்புடைய பல சிறப்பு வரிச் சலுகைகள் இங்கு உள்ளதனையும், மருந்து, தொழிநுட்பம் மற்றும் ஆடைத் தொழில் துறைகளில் நேரடி முதலீட்டிற்கான பரந்த வாய்ப்புகள் இலங்கையில் இருப்பதனையும் ஜனாதிபதி
தெளிவுபடுத்தினார்.

கொழும்பு துறைமுக நகர் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்துடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்புகளில் முதலீடு செய்யுமாறு சவூதி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் சவூதி அரேபியாவின் எமது நாட்டுக்கான பிரதித் தூதுவர் அப்துல்லாஹ் ஏ.ஆர்கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.