மழை மற்றும் வெள்ளத்தில் அழிவடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பூசணி பயிர்செய்கை

சேருநுவர, ஸ்ரீமங்கலபுர பகுதியில் நீண்டகாலமாக பூசணி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர், அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாரிய பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ளார்.

குறித்த விவசாயி பல ஆண்டுகளாக தமது வாழ்வாதாரமாக பூசணிப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகிறார்.

இவ்வருடமும் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து முறையாக பராமரிக்கப்பட்ட தோட்டங்கள், அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், எதிர்பாராத விதமாக பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, குறித்த தோட்டங்கள் முழுமையாக நீரில் மூழ்கின.

நீண்ட நாட்களாக தோட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியிருந்ததால், பூசணிக்காய்கள் அனைத்தும் செடியிலேயே அழுகத் தொடங்கியுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த விளைச்சல்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக விவசாயி கவலையுடன் தெரிவிக்கிறார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மனிதநேய உள்ளங்கள் தமக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.