மனித உரிமை ஆணையாளர் திருகோணமலைக்கு விஜயம்

-மூதூர் நிருபர்-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கை இன்று புதன் கிழமை திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நடவடிக்கையினை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இன்று திருகோணமலை -ஜுப்லி மண்டபத்திற்கு விஜயம் மேற்கொண்டு சிவில் செயற்பாட்டாளர்களை சந்தித்த நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக ஜுப்லி மண்டபத்தின் முன்பாக பாதிக்கப்பட்ட சமூகங்கள், குடிமைப் பூர்வ அமைப்புகள், மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது கவனயீர்ப்பில் கலந்து கொண்டோரை மனித உரிமை உயர்ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களிடமிருந்து மகஜர்களையும் பெற்றுக் கொண்டார்.