மட்டக்களப்பில் பூரணை தினத்தில் தனியார் வகுப்பு நடாத்த முற்றாக தடை – மட்டு மாநகர சபையின் தீர்மானம் நிறைவேற்றம் -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையினை வழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடலானது, மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக ராமகிருஸ்ண மிஷனின் மட்டக்களப்பு கிளையின் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் உள்ளிட்ட மதத் தலைவர்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கியதுடன், ஆலோசனையினையும் வழங்கியிருந்தனர்.

இதன் போது ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாட்டினை நிறுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், இவ்வாறான கல்விச் செயற்பாடுகளினால் மாணவர்களிற்கு ஏற்படும் உல நல பாதிப்பு, மாணவர்களிடையே காணப்படும் போட்டித் தன்மையினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, உள நல வைத்திய நிபுணர் வைத்தியர் கடம்பநாதன் உள்ளிட்ட தனியார் கல்வி நிறுவனங்களின் நிருவாகிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது இறுதி தீர்மானமாக ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 10 வரையான மாணவர்களிற்கு எந்தவித பிரத்தியேக வகுப்புக்களும் நடாத்த கூடாது எனவும், பௌர்ணமி தினங்களில் எந்தவொரு வகுப்புக்களும் நடாத்த முடியாது எனவும் முடிவு எட்டப்பட்டு முதல்வரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.