மட்டக்களப்பில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்யப்பட்ட இளைஞன் : விசாரணையில் வெளிவந்த உண்மை!
அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன், கல்முனையைச் சேர்ந்த தனியார் பஸ்வண்டி உரிமையாளர் ஒருவரின் கல்முனை கதுருவெல பிரதேசத்துக்கான பஸ்வண்டியில் நடத்துனராக கடமையாற்றி வந்துள்ளார்.
இதன்போது, களுவாஞ்சிக்குடி மகிளுரைச் சேர்ந்த பஸ்வண்டி உரிமையாளரது பஸ்வண்டி, கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில், இரு பஸ்வண்டிகளின் நேர அட்டவணையில் நிமிட கணக்கான வித்தியாசத்தினால் பிரயாணிகளை ஏற்றுவதில் அடிக்கடி முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளது
இந்த நிலையில், 5ம் திகதி சனிக்கிழமை கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பஸ்வண்டி நடத்துனர் மற்றும் சாரதியுடன் குறித்த தாக்குதலுக்கு உள்ளான நடத்துனர் பஸ்வண்டியில் ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திய நிலையில், அவரது கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளது
அதனை தேடியபோது அது கிடைக்காத நிலையில் வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார்.
இதனையடுத்து, கடந்த 6ம் திகதி காலையில் காணாமல் போன கையடக்க தொலைபேசி தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ள அவர், சம்பவதினமான 7ம் திகதி காணாமல்போன கையடக்க தொலைபேசியைத் தேடி மீண்டும் களுவாஞ்சிக்குடிக்கு சென்று குறித்த பஸ்வண்டியில் தேடியுள்ளார்.
இந்நிலையல், அவரை பஸ்வண்டி உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் பிடித்து கையைகட்டி, பஸ்வண்டியில் திருடியதாக தெரிவித்து, பாழடைந்த காணிக்குள் இழுத்துச் சென்று தென்னைமரத்தில் கட்டிவைத்து தாக்கி சித்திரவரை செய்தனர்
அதன்பின்னர், தாக்குதலுக்குள்ளான நடத்துனரிடம், “நீ பொலிசில் தெரிவித்தால் உன்னை கைது செய்து 14 நாட்கள் களி தின்பதற்கு சிறையில் அடைப்போம்” என அச்சுறுத்திய தாக்குதலை மேற்கொண்டவர்கள், நடத்துனரை அங்கிருந்து முச்சக்கரவண்டி ஒன்றி ஏற்றிக் கொண்டு சென்று மட்டக்களப்பு கல்லாறு பாலத்திற்கு அருகில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
அதன்பின் தாக்குதலுக்குள்ளான நடத்தினர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடத்துனர் தொடர்பான எந்த விதமான தகவலும் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வீடியோ காட்சியை ஆதாரமாக கொண்டு கட்டிவைத்து தாக்குதல் மேற்கொண்ட தனியார் பஸ்வண்டி உரிமையாளர் மற்றும் சாரதி கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தாக்குதலுக்கு உள்ளான நடத்துனர், பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து, மேற்கொண்ட விசாரணையில், குறித்த நடத்துனர் மீது சுமத்தப்பட்ட திருட்டு குற்றச்சாட்டு சோடிக்கப்பட்ட பொய் என்பது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இருவரையும் எதிர்வரும் 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.