தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்-

யாழில் தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த இளைஞன் நேற்று முன் தினம் புதன் கிழமை வலிப்பு ஏற்பட்ட நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இணுவில் மேற்கு இணுவில் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் ஜீவன்சன் (வயது – 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்று முன் தினம் தந்தையின் மரக்காலைக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு தெல்லிப்பழையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கு தொட்டியினுள் தண்ணீர் நிரப்பிவிட்டு நீச்சலடித்துள்ளார். இதன்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மகனை காணாத நிலையில் பெற்றோர் அவரை தேடியவேளை அவரது சடலம் தண்ணீரில் மிதந்தவாறு காணப்பட்டது.

இந்நிலையில் சடலமானது மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.