அம்பாறை – தம்பிலுவில் பிரதேசத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டுக்கான கோவலன் ஆலயத்தில் 8 நாட்கள் இடம்பெறும் விசேட பூஜையின் 5 வது பூஜை நேற்று செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கோவலன் என்ற பெயரில் தனி ஆலயம் தம்பிலுவில் பிரதேசத்தில் இருப்பினும், சிலப்பதிகாரத்தின் நாயகன் கோவலன் மற்றும் அவன் மனைவி கண்ணகியின் நினைவாக, கண்ணகி அம்மன் கோயில்களும், கோவலன் கண்ணகி தொடர்பான பல இடங்களும் உள்ளன.
மதுரை கோவலன் பொட்டல் மற்றும் தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயம் போன்றவை கண்ணகி-கோவலன் கதையுடன் கோவலன், கண்ணகியுடன் வந்து தங்கியிருந்த இடமாக கருதப்படும் ஒரு புனிதத் தலமாகும்.
இங்கு கண்ணகி சிலையும், கோவலன் தொடர்பான தொடர்புடைய கதைகள் உள்ளன.
கோவலன் இறந்த பிறகு, மக்கள் மத்தியில் கோவலன் கூத்து என்ற நாட்டுப்புறக் கலை வடிவம் இன்றுவரை இடம்பெற்று வருகிறது என்பது அறிந்தவிடயம்.
இதேவேளை தம்பிலுவில் மக்கள் வருடம் தோறும் இந்த வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 நாட்கள் வடசேரி, தென்சேரி குடிகளினால் விளையாட்டு இடம்பெறுவது வழக்கமாகும்.
கொம்புமுறி விளையாட்டு, கிழக்கிலங்கையின் ஏனைய பகுதிகளிலும் முற்றாக அருகிப்போய், கொம்புமுறிப்பு என்றால் என்னவென்றே அறியாத தலைமுறையாக கடந்து போகின்றது.
பிரதேசத்தில், அம்மன் கோயில் சடங்கு, திருக்கோவில் தீர்த்தம், கதிர்காமப் பாதயாத்திரை ஆகிய மூன்று பருவகாலங்களும், சிறியவர் முதல் பெரியவர் வரை, எத்தகைய குதூகலத்தை ஏற்படுத்துகிறதோ, அதே குதூகலத்தை ஏற்படுத்தும் காலவேளையாக, ஒருகாலத்தில் கொம்புமுறிப்பும் விளங்கி இருந்திருக்கின்றது.
இந்த நிலையில் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வீதியில் மழை வேண்டி முன்னெடுக்கும் கொம்புமுறி விளையாட்டு வழிபாடு கண்ணகி அம்மனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகிறது.
அம்மை கொப்பளிப்பான், கண்நோய் போன்ற நோய்களை அம்மன் கோதாரி என்று அழைப்பது தம்பிலுவில் பிரதேச வழக்கம். அதிகமாக இக்காலத்தில் இந்த நோய்கள் அதிகம் பரவுவதாலும் மஞ்சளும் வேப்பிலையாலும் கண்ணகி அம்மனுக்கு விழா நடத்தினால் அம்மன் மகிழ்ச்சி உற்று மழை பொழியும் எனவும் நோய்கள் குறையும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
கண்ணகி அம்மன் காவியம் பாடி இந்த வழிபாட்டை காலம் காலமாக இந்த மக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








