ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடற்கரை வீதியின் 95 வத்தை பகுதியில் வைத்து நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதானவரிடம் இருந்து 24 கிராம் 300 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கடற்கரை வீதி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்த நிலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.