ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

 

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிதியாண்டில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு மீள் கையளிக்க இடமளிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் மூலம் தேவையான அபிவிருத்திப் பணிகள் நடைபெறாததுடன், பணம் விரயமாகும் என்றும், ஒரே திட்டத்திற்கு மீண்டும் மீண்டும் பணம் ஒதுக்குவதால், புதிய திட்டங்களை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் அரச திட்டங்களாக நிர்மாணப்பணிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்ட போதிலும், அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் பராமரிப்பு தொடர்பில் உரிய மதிப்பீடுகள் இடம்பெறாததால், அதன் ஊடாக அரசாங்கத்திற்கு மேலதிக செலவினங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை சார்க் கலாசார நிலையம், அநுராதபுரம் கேட்போர் கூடம் போன்ற பல கட்டிடங்களின் பராமரிப்புச் செலவு அதிகமாக
உள்ளதால் அவற்றை பொறுப்பேற்க எந்த நிறுவனமும் முன்வராத நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா பங்களாக்கள், விடுதிகள், பொது வர்த்தக நிலையங்கள் போன்ற கட்டிடங்கள் வெறிச்சோடிய இருண்ட இடங்களாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான நிறுவனங்களை தனியார் துறை நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமான பொறிமுறையாகும் என்றும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 15,000 குடும்பங்கள் அபாயகரமான பகுதிகளில் வசிப்பதாகவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 2763 குடும்பங்கள் மாத்திரம் வசிப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதன்போது சுட்டிக்காட்டியது.

இரத்தினபுரியை பாதிக்கும் வெள்ளத்தை கட்டுப்படுத்த களுகங்கையின் இரண்டு கிளை நதிகளை பயன்படுத்தி Dry Dam திட்டம் முன்மொழியப்பட்ட போதிலும், அதற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2014 இற்குப் பிறகு மேற்கொள்ளப்படவில்லை என நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இதன்படி, இரத்தினபுரி வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்கு மிகவும் பொருத்தமான செயற்திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பல குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதுடன், இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார். பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து, பாதுகாப்பற்ற சிறுவர்களை இனங்கண்டு கண்காணிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் இங்கு சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, அது குறித்த நடவடிக்கைகளை நாளாந்தம் மேற்கொண்டு தற்போது ஓரளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

மாவட்டத்தில் உள்ள சுரங்கத் தொழிற்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இரத்தினக் கற்களின் பெறுமதி சேர்ப்பதற்கான ஆய்வுகூடத்துடன் கூடிய வர்த்தக நிலையம் ஆரம்பிக்கும் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தற்போது பயன்படுத்தப்படாத, அதிக வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட இரத்தினபுரி நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரிய காணிகளை செயற்திறனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சாந்த பத்மகுமார மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், இரத்தினபுரி மாநகர சபை மேயர் கே.ஏ.டி.ஆர். இந்திரஜித் கடுகம்பல, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.