கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையை கைப்பற்றியது இலங்கை தமிழரசு கட்சி

-கிரான் நிருபர் –

மட்டக்களப்பு கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது.

கோரளைபற்று பிரதேச சபை சபா மண்டபத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுந்தர லிங்கம் சுதாகரன் 15 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் சுந்தர லிங்கம் சுதாகரன், மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர் தனபாலன் நிர்மலன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இவர்களில் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் சுந்தர லிங்கம் சுதாகரன் 15 வாக்குகளை பெற்றுக்கொண்டதுடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர் தனபாலன் நிர்மலன் 4 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

மேலும் இதன்போது தமிழரசு கட்சி உறுப்பினருக்கு தழிழரசுகட்சியிலிருந்து 10 வாக்குள், முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து 4 வாக்குகள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசி கூட்டணியிலிருந்து 1 வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில் கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியது.

இதேவேளை தேசியமக்கள் சக்தியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிமக்கள் சக்தி 3 உறுப்பினர்களும் நடுநிலையாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதை அடுத்து பிரதி தவிசாளர் தெரிவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இதன்போது தமிழரசு கட்சியைச் சேர்ந்த குழந்தைவேல் பத்மநீதன் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த நவராசலிங்கம் நிமல்ராஜ் முன்மொழியப்பட்டு வழி மொழியப்பட்டிருந்தார்.

இதில் குழந்தவேல் பத்மநீதனுக்கு ஆதரவாக 15 வாக்குகளும் நவராசலிங்கம் நிமல்ராஜ் ஆதரவாக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதுடன் நடுநிலையாக 7 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள்.

அதன்படி கோறளைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளராக குழந்தவேல் பத்மநீதன் தெரிவு செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபை அமர்வை தொடர்ந்து தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.