கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் கடமை பொறுப்பேற்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விஞ்ஞான பீடத்தின் பௌதீகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பகல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடந்த மாதம் நடைபெற்ற பேரவை நேர்முகப்பரீட்சையின் புள்ளிகள் அடிப்படையில், முதலிடத்தினை கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பௌதீகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், இரண்டாம் இடத்தினை முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், முன்றாவது இடத்தினை சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் பீடாதிபதியுமான பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் ஆகியோர் பெற்றிருந்தனர்.

இம்முறை கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்காக கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் உள்ளிட்ட எட்டுப் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களிலேயே முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். அதனடிப்படையில் ஆணைக்குழுவின் பரிந்துரையை அடுத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 21ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், பிரதி உபவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் தம்பிராசா பிரபாகரன் பதில் கடமை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பணிக்கப்பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததன் பின்னர், முன்னாள் உபவேந்தரும் பௌதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எவ்.சி.ராகல் பதில் உபவேந்தராக பல்கலைக்ககழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.