கிளிநொச்சியில் “பிடியளவு கமநலத்திற்கு” தேசிய வேலைத்திட்ட நிகழ்வு
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர்செய்கை மேற்கொள்ளாது காணப்படும் நிலங்களை பயிர்ச் செய்கைக்குரிய நிலமாக மாற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் “பிடியளவு கமநலத்திற்கு”என்ற தேசிய வேலைத்திட்ட நிகழ்வு கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருவையாறு முதலாம் பகுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் பா.தேவரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி லால் காந்த, கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ,கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் யு.பி ரோகண ராஜபக்ச உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல வருடமாக பயிர்செய்யாது காணப்பட்ட நிலத்தினை சம்பிரதாயபூர்வமாக நிலக்கடலை விதைத்து ஆரம்பித்து வைத்தனர்.
மேலும் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ், வடமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர், விவசாய துறை சார்ந்த திணைக்களங்களின் உதவிப்பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் வடமாகாண தென்னை முக்கோண வலயத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தென்னை செய்கையையும் ஆரம்பித்து வைத்தார்.