கடலை அண்மித்த பகுதியில் குப்பை கொட்டுவதால் சூழல் மாசடைவதாக மக்கள் குற்றச்சாட்டு!

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- குச்சவெளி பிரதேச சபையினால் சல்லிமுனை பகுதியில் குப்பை கொட்டுவதினால் சூழல் மாசடைவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜாயா நகரை அண்மித்த சல்லி முனை பகுதியில் குப்பை கொட்டுவதினால் சூழல் மாசடைவது மட்டுமல்லாமல் காட்டு யானைகளின் அட்டகாசம் மற்றும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குச்சவெளி பிரதேச சபையினால் குப்பை கொட்டும் சல்லிமுனை பகுதி மழை காலங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து குப்பைகளை கடல் பகுதிக்கு கொண்டு வருவதாகவும் இதனால் கடல் வளங்கள் மற்றும் சூழல் மாசடைவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கூறிய போது சம்பவ இடத்திற்கு அவர் வருகை தந்தும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி பிரதேச சபை குப்பைகளை கொட்டுவதற்கு இடம் ஒன்றினை ஒதுக்கி ஒரே இடத்தில் குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது குப்பைகள் அங்கும் இங்கும் கொட்டப்படுவதினால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மழை காலங்களில் குப்பைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு கடற்கரைகளை அசுத்தப்படுத்துவதுடன் டெங்கு பரவும் விதத்தில் குப்பைகள் வீசப்பட்டு வருவதாகவும் மிக விரைவாக குப்பை கொட்டுவதற்குரிய தனியான இடம் ஒன்றை ஒதுக்கி சூழல் மாசடைவதற்கு வழி வகுக்காத நிலையில் குச்சவெளி பிரதேச சபை செயல்பட வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்