எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்
மத்திய கிழக்கு நாடுகளில் உக்கிரமடைந்துள்ள மோதல் நிலைக்கு மத்தியில் பல்வேறு துறைகளின் ஊடாக இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இது தொடர்பில் கருத்துரைத்தார்.
இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளில் இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாகவும், அவர்கள் அனுப்பும் பணத்தில் சில தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்றும், உலகில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தேயிலை உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்குக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் விஜித்த ஹேரத், அமைச்சர் சமந்த வித்யாரத்ன, அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் ஜயக்கொடி இந்த குழுவில் அங்கத்துவம் வகிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.