இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை மீறியதாக டிரம்ப் குற்றச்சாட்டு

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கூறியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தற்போது இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இருநாடுகள் மீதும் தனக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய டிரம்ப், குறிப்பாக இஸ்ரேல் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஈரான்-இஸ்ரேல் போருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக கூறப்படுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த காலத்தில் இஸ்ரேலின் பல பகுதிகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

அதன்படி, ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்கு எதிராக சக்திவாய்ந்த பதிலடி தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேலிய இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.