இளைஞர்கள் மத்தியில் தவறான முடிவுகளும் அதற்கான காரணமும் தீர்வுகளும்
ஓவ்வொரு மனிதனின் மனோநிலையும் வேறுவேறாகவே காணப்படுகின்றது. அது அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. சூழ்நிலையைப் பொறுத்தே எண்ணங்களும் தேவைகளும் மாறுபடுகின்றன. இன்றைய நவீன உலகில் வாழும் மனிதன் தன் தேவைகளைப் பொறுத்து மனோநிலைகளை மாற்றிக் கொண்டே செல்கின்றான். இன்றைய சமூகத்தில் கொலை, தற்கொலை போன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணமே காணப்படுகின்றன.
குறிப்பாக இலங்கையினை எடுத்துக் கொண்டால் இன்று இலங்கையில் தற்கொலைகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இளம் சமூதாயமானது இன்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தற்கொலை செய்யும் வண்ணம் உள்ளார்கள். காதல் தோல்வி, குடும்பத்தகராறு, நண்பர் வட்டாரத்தில் பிரச்சினை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்ட வண்ணம் இருக்கின்றார்கள். குறிப்பாக காதல் பிரச்சினைகள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் போன்றவற்றால் தற்கொலை செய்யும் இளைஞர் சமூகம் வளர்ந்நு கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இவ்வாறான பிரச்சினைகள் எவ்வாறு தோன்றுகின்றதெனில், குடும்ப அங்கத்தவராயினும் சரி காதலிப்பவராயினும் சரி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லாமை, ஒருவரையொருவர் சரியாக புரிந்துகொள்ளாமலும் ஈ கோ உணர்வுகளின் வெளிப்பாட்டினாலும் பிரச்சினைகள் எழுகின்றன.
இதனால் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் கோவத்தினாலும் தவறான முடிவுககை நோக்கி நகர்கின்றார்கள். இளம் சமூகத்தினர் இதில் அதி வேகமாக செயற்படுகின்றார்கள் என்றே கூறவேண்டும். சாதாரணமாக காதல் விவகாரங்களிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் அனேகமானோர் விபரீதமான முடிவுகளையே எடுக்கின்றார்கள். ஆணோ பெண்ணோ குறித்த காதல் விடயத்தில் தம்முடைய விருப்பிற்கு மாறாக சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது அதனை ஏற்கும் மனோதைரியம் இல்லாத போது தற்கொலை மற்றும் கொலை போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இதற்கு உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இடம்பெற்று வரும் தற்கொலை சம்பவங்களை கூறலாம். சமீப காலத்தில் அதிகளவு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
அடுத்ததாக கூறப்போனால் நாட்டினுடைய அசாதாரண சூழ்நிலைகளும் ஒரு காரணம்தான் நாட்டில் தற்போது இடம்பெற்றுள்ள பொருளாதார ரீதியான மந்த நிலை, மற்றும் பொருட்களின் விலையேற்றம், அதிகரிகத்த வரி விதிப்பு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளினால் குடும்ப நிலையில் ஏற்படுகின்ற வறுமை நிலை, கல்வி கற்பிக்க முடியாது பெற்றோர்கள் தம்முடைய பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் செயற்பாடு, கற்றும் வேலையில்லாத நிலை போன்ற நிலைகளால் ஏற்படுகின்ற பிரச்சினைகளால் குடும்பத்தில் ஏற்படுகின்ற விரிசல் நிலையினால் மன அழுத்ததங்களால் தற்கொலை செய்தல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.
இவ்வாறான சூழ்நிலைகளைக் கையாண்டு தற்கொலைகளைத் தவிர்த்து எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்பும் விதமாக தற்போதைய சமுதாயம் மாறவேண்டும். அதற்காக சில வழிமுறைகளை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் செயற்பட வேண்டும் என பல உளவியல் நிபுணர்களும் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் புரிந்துணர்வு என்பது முக்கியமாகின்றது. ஒருவர் கருத்தை அல்லது உணர்களை புரிந்து செயற்பட வேண்டும் என்பது முக்கியமாகும். இதனால் தாழ்வுமனப்பான்மை, மன அழுத்தம், மன கவலை போன்றவை குறையும் மற்றும் தவிர்க்கலாம்.
மேலும் காதல் தோல்வி போன்ற விடயங்களில் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான நபரினையும் வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதும் முக்கியமே. வாழ்க்கைத் துணையுடன் சரியான முறையில் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். உடலுறவு தொடர்பில் முறையாக நடந்து கொள்ளும் போது மன அழுத்தம் குறைவடைகின்றது. வாழ்க்கை சந்தோசமானதாக தொடரும். ஏமாற்றம், துரோகம், நம்பிக்கையின்மை, குரோதம், கோவம், மற்றும் போட்டி பொறாமை போன்ற துர்க்குணங்களை கைவிட வேண்டும். மிக முக்கியமாக இன்றைய சமூகம் சமூக வலைத்தளங்களுககுள் முழ்கியுள்ளது. அதனை குறைக்க வேண்டும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லுவதன் மூலமும் தற்கொலை, மன அழுத்தம் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்