
இலங்கையில் ட்ரோன் பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடு
இலங்கையில் ட்ரோன் (Drone) எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை ஒழுங்குப்படுத்துவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை புதிய விரிவான திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வணிக ரீதியான தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல இது குறித்துத் தெரிவிக்கையில்,
வணிக ரீதியான மதிப்புள்ள அனைத்து ட்ரோன்களும் புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். “மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் என இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கான விதிமுறைகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த ஆண்டு முதல் அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்,” என அவர் மேலும் விளக்கினார்.
புதிய ஒழுங்குமுறையின் முக்கிய அம்சங்களாக, 250 கிராம் முதல் 25 கிலோகிராம் வரையிலான எடையுள்ள, வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குள் வரும்
250 கிராமுக்கு குறைவான எடையுள்ள ட்ரோன்கள் ‘விளையாட்டுப் பொருட்கள்’ (Toys) என வகைப்படுத்தப்படும். இவை வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படாதவரை அவற்றுக்குப் பதிவு தேவையில்லை.
ட்ரோன்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள தனியான சட்ட திட்டங்களை இயக்குநர்கள் பின்பற்ற வேண்டும்.
பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் அண்மைய சம்பவங்கள்
கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ (Cyclone Ditwah) சூறாவளியின் போது, அனுமதியற்ற ட்ரோன் செயல்பாடுகள் மீட்புப் பணிகளுக்குப் பெரும் இடையூறாக அமைந்தன. குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர்களுக்கு இவை அச்சுறுத்தலாக இருந்ததால், அனைத்து ட்ரோன் பறப்பு நேரங்களையும் விமானப் படையினருக்கு (SLAF) அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டது.
மேலும், புனித ஸ்தலங்களான கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் அநுராதபுரத்திலுள்ள ருவன்வெலிசாய போன்ற பகுதிகளில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அதிகார சபை மீண்டும் எச்சரித்துள்ளது.
