இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவு.. நாளை தேர்தல் : 45 மணிநேர தியானத்தை ஆரம்பித்தார் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் நேற்று வியாழக்கிழமை முதல் 45 மணி நேரம் தியானத்தை ஆரம்பித்துள்ளார்
சுவாமி விவேகானந்தர் இதேபாறையில் 3 நாட்கள் தியானமிருந்த நிலையில் இற்றைக்கு 142 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மோடி அங்கு தியானம் செய்வதால் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்திய பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதில், 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 7ஆவது மற்றும் இறுதி கட்டமாக 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் நாளை சனிக்கிழமை (ஜூன் முதலாம் திகதி) நடைபெறவுள்ளது.
இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் தேர்தர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
கடந்த இரு தேர்தல் முடிவடைந்ததுமே பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார்.
2014இல் உத்தரப் பிரதேசத்தில் பிரதாப்கரில் தியானம் செய்தார். 2019இல் இமயமலையில் கேதார்நாத் குகையில் மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் தியானம் மேற்கொண்டார்.
இந்நிலையில் நடப்பு தேர்தல் முடியும் தருவாயில் பிரதமர் மோடி இந்தியாவின் கடைகோடியிலுள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தொடர்ச்சியாக 45 மணி நேரம் தியானம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற பிரதமர் மோடி, அதே தொகுதியில் 3ஆவது முறையாக பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வாரணாசியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்ட மோடி, கன்னியாகுமரிக்கு வருகைதந்துள்ள நிலையில் அங்குள்ள விவேகானந்தர் நினைவிடம் சென்று அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொத்தமாக 48 மணி நேரம் பிரதமர் விவேகானந்தர் நினைவிடத்தில் தங்குவதால், ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
3,500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நேற்றே ரத்து செய்யப்பட்டது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்