இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியாவின் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரக் கதவு வழியாக உடனடியாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் காலை டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக, இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
இந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர்களால், குறித்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இணைந்து குறித்த விமானத்தை, விமான நிலையத்தின் ஒதுக்குப் புறமான பகுதிக்குக் கொண்டு சென்றனர்.
அத்துடன் விமானத்தில் இருந்த பயணிகள் அவசரக் கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களால் விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், விமானத்தில் சந்தேகத்திற்கிடமான எந்தவித பொருட்களும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்