ஆறு வார காலங்களுக்குள் இடைக்கால வரவுசெலவுத் திட்டம்
அரசாங்கம் ஆறு வார காலங்களுக்குள் இடைக்கால வரவுசெலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கிணங்க அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவுசெலவுத் திட்டம் நிவாரணங்களை வழங்கும் வரவுசெலவுத் திட்டமாக அமையுமென்றும் அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது இரண்டு வருடங்களுக்கு நிவாரண வேலைத்திட்டத்திற்காக செலவிடப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாத்தியமற்ற பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வுகாணப்பட்டு நாட்டை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளவேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களில் மிகவும் அத்தியாவசியமான தேவைகளையுடைய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்திசெய்வதற்காக நிதியை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு வருமானம் இல்லாத நிலையில் தற்போது மேலும் ட்ரில்லியன் ரூபாவை அச்சிட நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.