அரசாங்க தகவல் பணிப்பாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களினால் கௌரவம்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நடைபெற்ற மாவட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் 2025 ஆண்டிற்கான ஊடக அதியுயர் விருது வழங்கும் விழா நேற்று வியாழக்கிழமை ஒல்லாந்தர் கோட்டையில் உள்ள மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 25 தொடக்கம் 50 வருடங்களுக்கும் அதிகமான காலமாக உள்நாட்டு யுத்தம், சுனாமி , வெள்ளம் என ஏற்பட்ட அவசர நிலைமையிலும் ஊடகத்துறையில் பணியாற்றி வரும் சுமார் பத்து ஊடகவியலாளர்கள் இதன்போது அதியுயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
மூத்த ஊடவியலாளர்களான இராஜேந்திரன் தவராஜா, விஸ்வநாதன் பத்மசிறி, மு.கௌ.அப்துல் நாஸர், செய்யித் முகம்மது, முகம்மத் முஸ்தபா, தம்பி லெப்பை ஜவ்பர்கான், வி.கே.ரவீந்திரன், சிவம் பாக்கியநாதன், சதாசிவம் தவபாலரெட்ணம், இளையதம்பி பாக்கியராசா மற்றும் அப்துல் ஹமீது அப்துல் ஹுஸைன் ஆகியோர் கௌரவத்தைப் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது மாவட்ட ஊடகப் பிரிவினால் கௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய “ஊடகத் தடம்” எனும் விசேட மலர் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஆலோசனை மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறிகாந்த் வழிகாட்டலில் தயாரித்து வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூத்த ஊடகவியலாளர்களுக்கான இவ்வுயரிய விருதானது மாவட்டத்தில் முதல் தடவையாக மாவட்ட ஊடப்பிரிவின் ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளதுடன், இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறிகாந்த், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எல்.பி.திலகரத்ன, நூல் அச்சிடலுக்கான அனுசரனை வழங்கிய தொழிலதிபர் மு.செல்வராசா, தகவல் திணைக்கள அதிகாரி வ.ஜீவானந்தன், மாவட்ட செயலக ஊடகப்பிரிவின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் உ.உதயகாந்த் உள்ளிட்டோர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது “ஊடக ஒழுக்க நெறி மற்றும் ஊடக பயன்பாடு தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வு” அரச தகவல் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்ததுடன் இச்செயலமர்விற்கு வளவாளர்களாக தற்போதைய மொறவெவ பிரதேச செயலாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளருமான அ. நவேஸ்வரன் மற்றும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.வீ.எம்.பைறூஸ் ஆகிய இருவரும் கலந்து கொண்டு சிறந்த முறையில் வளவாண்மை மேற்கொண்டிருந்ததுடன், அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அவர்களினால் தேசிய அபிவிருத்தி மற்றும் வரவு செயலவுத் திட்டம் 2025 தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஊடக நெறிமுறைகள், பிரதேச ஊடகங்களின் வகிபாகம், கிளீன் ஸ்ரீ லங்கா, தேசிய அபிவிருத்தி மற்றும் வரவு செலவுத் திட்டம் 2025 ஆகிய விடயங்கள் உள்ளடக்கங்களாகக் கொண்ட இச் செயலமர்வில் 60 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எல்.பி.திலகரத்ன, தற்போதைய மொறவெவ பிரதேச செயலாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளருமான அ. நவேஸ்வரன், அரசாங்க தகவல் திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், மாவட்ட ஊடகப்பிரிவின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், உயரிய விருது பெற்ற ஊடகவியலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.