தனது வீட்டினுள் புதையல் தோண்டிய இளைஞர் கைது

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டில் புதையல் தோண்டுவதாக பண்டாரவளை பிராந்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை பிராந்திய பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சோதனையின் போது   வீட்டில் புதையல் தோண்டிகொண்டிருந்த  நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் புகையிரத வீதி ஹப்புத்தளை பகுதியில் சேர்ந்த 24வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது

சந்தேக நபரிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்தபடும் 02 மண்வெட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், பூசணிக்காய்கள், பூக்கள், கறுப்புத் துணிகள், சாம்பிராணி உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பிரதீப் கலுபானவின் ஆலோசனைக்கு அமைய , பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் அசோக, தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்

விசாரணையின் பின்னர் சந்தேக நபரை, பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.