
கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகாமையில், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள, 12 அறைகளை கொண்ட சொகுசு வீடு தொடர்பில், குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வீட்டின் மின்சார கட்டணம், ஜி.ராஜபக்ச என்ற பெயரில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்திய போது, அந்தச் சொத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும், மின்சாரக் கட்டணங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் முன்னாள் ஜனாதிபதி பதிலளித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவை, ஜனவரி 03 ஆம் திகதிகுற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்திய போது, அவரும் குறித்த வீட்டுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை, என தெரிவித்திருந்தார்.
குறித்த கட்டடம், 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் இராணுவ சிப்பாய்களை கொண்டு கட்டப்பட்டதாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், யோஷித ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர், குறித்த கட்டிடத்தில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்