இல்மனைட் அகழ்வு தொடர்பில் சுற்றாடல் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரின் நிலைப்பாடு என்ன?
வாகரை பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக எமது உயிரையும் விடுவோம் என்று சபதம் செய்த ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தற்சமயம் சுற்றாடல் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி ஏற்ற பின்பு குறித்த விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்த கணபதிப்பிள்ளை மோகன்
வாகரையில் இல்மனைட் அகழ்வு இடம்பெறுமானால் அதை தடுத்து நிறுத்த என் உயிரையும் விடுவேன் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது சுற்றாடல் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இப்போது அவரது அமைச்சின் கீழ் வரும் குறித்த இல்மனைட் அகழ்வு பிரச்சினை தொடர்பில் அவர் தற்போது என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
கணபதிப்பிள்ளை மோகனின் கேள்வி தொடர்பில் வினவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, சுற்றாடல் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பின் அவர் தன்னுடைய திட்டங்கள் தொடர்பில் பகிரங்கமாக பேசியிருக்கிறார், என்றும் அவர் இவ்விடயத்திற்கு விரைவில் பதிலளிப்பார் என்றும் அவரது ஊடக பிரிவினரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்