வவுனியா இரட்டை கொலை : மூவருக்கு பகிரங்க பிடியாணை

வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு வவுனியா நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை  பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

குறித்த இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு பேர் சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் ஆய்வுகளை முன்னெடுத்து வந்தனர்.

அத்துடன், எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவரை தான் கண்டதாகவும் அவரை அடையாளம் காட்ட முடியும் எனவும் விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்புக்கு திகதியிடப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த யுவதி நேற்று  இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை அடையாளம் காட்டியுள்ளார்.

மேலும், மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த மூவரும் தலைமறைவாகியுள்ளதால் அவர்களை கைது செய்ய வவுனியா நீதிமன்றத்தால் பகிரங்க பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்