குடிநீரை பெற அல்லற்படும் 450 குடும்பங்கள்

 

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள கண்ணகி நகர் எனும் கிராமத்தில் சுமார் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் 450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்கள் வாழ்வாதாரமாக கடல் தொழில் மற்றும் விவசாயத்தினையை மேற்கொண்டுவரும் நிலையில், இவர்களின் நாளாந்த தேவைக்காக சுத்தமான தண்ணீரை பெற முடியாத நிலையில் வசித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்

இது குறித்து இம்மக்கள் தெரிவிக்கையில், தமது பகுதிகளில் சுத்தமான தண்ணீர் பெறக்கூடிய வகையில் மூன்று கிணறுகளே உள்ளன, அதுவும்  தனியார் காணியில் அமைந்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

தமது கிணறுகளில் உள்ள கிணற்று தண்ணீரை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் மஞ்சள் நிற காவியாக காட்சியளிக்கின்றது, உடைகளை துவைக்கும் போது அவை உடனே மஞ்சளாக மாறிவிடுகின்றது, இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள்,  சிறியவர்கள் முதியவர்கள் என பலரும் குளிப்பதற்கும் ஏனைய தேவைக்களுக்கு நீரை பெற வேண்டுமாயின் அருகில் உள்ள குளங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

இத்துடன் வயது முதிர்ந்தவர்கள் இந்த மஞ்சள் காவி நீரினையே பருகியும், தமது நாளாந்த தேவைக்கு பயன்படுத்தியும் வருகின்றனர், இதன் காரணமாக சிலர் நோய்வாய்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற பொழுது வைத்தியர்கள் சுத்தமான குடிநீரை பருக வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளனர்

இருப்பினும் சுத்தமான குடிநீர் பெறுவது பெரும் சிரமமாக உள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.