மட்டக்களப்பில் பிரதேச செயலாளர் இடமாற்றம் : இராஜாங்க அமைச்சர் மற்றும் ஆளுரின் அழுத்தம் என மக்கள் தெரிவிப்பு?

வாகரை பிரதேசத்தி பிரதேச யெலாளர் இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்து இன்று புதன்கிழமை வாகரை பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஜீ .அருணன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வாகரை பிரதேசத்தில் நடக்கும் இறால் வளர்ப்பு மற்றும் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பிரதேச செயலாளர் அருணன் செயற்பட்டார் என்றும் அவர் எப்பொழுதும் பிரதேச மக்கள் நலன் சார்ந்து மட்டுமே செயற்பட்டார் என்றும் அதனால் தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என வாகரை பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் .

இவ்விடயம் தொடர்பில் வாகரை ஆலய பரிபாலனசபையின் தலைவரான க.பாலசந்திரன் தெரிவிக்கையில்:-

எமது பிரதேச செயலாளர் எமது பிரதேசத்தை நேசிக்கும் ஒருவர். அவர் எமது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் மிகவும் முனைப்புடன் செயற்பட்டவர். அவ்வாறான ஒருவரை இடமாற்றம் செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எமது பிரதேச செயலாளர் அருணன் தான் எமக்கு வேண்டும்  என  வாகரை ஆலய பரிபாலனசபையின் தலைவரான க.பாலசந்திரன்  தெரிவித்தார்.

அத்துடன் இங்கு இல்மனைட் அகழ்வு போன்ற இயற்கை வளங்களை அழிக்கும் செயற்பாடுகளுக்கு அனுமதி தருமாறு கோரி இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் ஆளுநர் செந்தில் தொண்டமானும் எமது பிரதேச செயலாளருக்கு அழுத்தங்களை வழங்குகிறார்கள் என்பது எமது மக்களுடைய அச்சம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் அருணனை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது என்னுடைய இடமாற்றம் ஏற்புடையதல்ல. நான் எந்த தவறும் செய்யவில்லை. என்ன சூழ்நிலையிலும் நான் மக்களுக்காக மட்டுமே பணியாற்றுவேன் சட்டவிரோத செயல்களுக்கு நான் என்னுடைய பிரதேசத்தில் அனுமதி வழங்க மாட்டேன் என தெரிவித்தார்.

இறால்வளர்ப்பு :-

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இறால் வளர்ப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்தார். இத்திட்டத்தினூடாக அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும் பொருளாதாரத்தை முன்னேற்றமடையவும் செய்ய முடியும் என்று அவர் பல ஊடக சந்திப்புகளிலும் எமது “அரசியலின் மறுபக்கம்” நேர்காணலிலும்  தெரிவித்திருந்தார்.

எனினும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த இறால் வளர்ப்பு திட்டத்தின் மூலம் தங்களது நீர்  வளம் அழிக்கப்பட்டுவிடும் என மக்கள் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் மக்களது இந்த எதிரப்பானது சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பெயரில் இடம்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அதன்பின்னர் குறித்த இறால் வளர்ப்பு திட்டத்திற்கான பயனாளிகளை தெரிவு செய்யவதற்காக இடம்பெற்ற நேர்முகத்தேர்வுக்கு மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்

இல்மனைட் அகழ்வு:-

வாகரை பிரதேசத்தில் தொடர்ச்சியாக இல்மனைட் அகழ்வு இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இல்மனைட் அகழ்வு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களபபு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை அவரது தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். அதன்போது இராஜாங்க அமைச்சர் “இங்கிருந்து ஒருபிடி மண்ணையேனும் எடுக்க வேண்டுமெனில் அது என்னை தாண்டி தான் எடுக்க வேண்டும் நான் இருக்கும் வரை யாரும் இங்கிருந்து ஒரு பிடி மண்ணையேனும் கொண்டு செல்ல முடியாது என்றும் இந்த போராட்டத்தில் எனது உயிரையும் கொடுக்கவும் தயங்க மாட்டேன்”  என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வு இடம்பெறாது தடுக்க வேண்டிய பொறுப்பு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு உண்டு என வாகரை பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் மீதான குற்றச்சாட்டு:-

தற்போது வாகரை பிரதேச செயலக பிரதேச செயலாளரை இடம் மாற்றி இருக்கும் பின்னணியில்  இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டானும் இருப்பதாக வாகரை  மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆளுநரின் அழுத்தத்தின் பேரில்தான் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என , இன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

 

பிரதேச செயலாளர்  அருணன்

வாகரையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் இடம் மாற்றம் தொடர்பாக பிரதேச செயலாளரை தெரிவிக்கையில்.

இடமாற்றம் வழங்குமளவிற்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீது எவ்வித தவறுகளும் உறுதிப்படுத்தப்படவில்லை. நான் எனது பிரதேச மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களை மாத்திரம் தான் செய்வேன். எனக்கு யாரிடமிருந்து எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் நான் தவறாக விடயங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்