இரணைமடு குளத்தின் கீழ் 12 ஆயிரம் ஏக்கரில் மாத்திரமே சிறுபோக செய்கை

-கிளிநொச்சி நிருபர்-

பருவ மழை பொய்த்தமையால் இரணைமடு குளத்தின் கீழ் 12 ஆயிரம் ஏக்கர் மாத்திரமே சிறுபோக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது, அது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை இரணைமடு விவசாய சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன், இரணைமடு நீர்பாசன பொறியியலாளர்இ திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, இரணைமடு குளத்தில் தற்பொழுது காணப்படும் நீரின் அளவிற்கு அமைவாக 12 ஆயிரம் ஏக்கர் சிறுபோக செய்கை மேற்கொள்ள முடியும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விவசாய அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், எந்த பகுதியில் செய்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் பொறியியலாளரிற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலலை தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தின் உறுப்பினர் இளங்கோ குறிப்பிடுகையில்,

கடந்த வருடம் 100 வீதம் சிறுபுாகத்தை இரணைமடு குளத்திலிருந்து மேற்கொண்டோம். இம்முறை குளத்தில் நீர் இல்லாமையால் 12 ஆயிரம் ஏக்கர் மாத்திரமே செய்ய முடியும். இதேவேளை, ஜனாதிபதி கிளிநொச்சி வந்தபொழுது நவீன முறையிலான விவசாயத்தை செய்யுமாறு கூறினார்.

நாற்று நடுகை மூலமான விவசாயத்தை மேற்கொள்வதன் ஊடாக அதிக விளைச்சலை பெறமுடியும் என கூறினார். ஆனால் அதற்கான கால அவகாசம் எமக்கு போதாது. நிலத்தினை சீர் படுத்த காலம் தேவைப்படும். ஆனால் விரைவில் சிறுபோக செய்கையை நாங்கள் ஆரம்பிக்க வேண்டும்.

அத்துடன், அது தொடர்பான அறிவுகள் போதுமானதாக இல்லை. குறித்த விடயத்தை கொண்டு செல்வதற்கான உத்தியுாகத்தர்களும் இல்லை. மேலும், அதற்கான எரிபொருளை பெற்றுக்கொள்ளவும் முடியாது. ஏற்கனவே எமக்கு கிடைக்க வேண்டிய டீசல் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவ்வாறு நவீன முறையில் செய்வது சாத்தியமற்றது.

இந்த நிலயைில், எமக்கு தேவையான யூரியா கிடைக்காவிட்டாலும், ஏனைய மிக முக்கியமான பசளைகளையாவது விரைவாக அரசாங்கம் பெற்றத்தர வேண்டும், என அவர் இதன்போது தெரிவித்தார்.