ரஷ்யாவில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடி செய்த 3 பேர் கைது

ரஷ்யாவில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்து, 140 நபர்களிடமிருந்து  ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 3 பேர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை, சந்தேக நபர்கள் நடத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்களில் சாரதி பயிற்சி பாடசாலையை நடத்தி வந்த நபர் ஒருவரும் அடங்குவதாக மொரட்டுவ பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபரின் சாரதி பயிற்சி பாடசாலையில் நடத்திய சோதனையில் 39 பேரின் பாஸ்போர்ட் மற்றும் ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகளில் சந்தேக நபர்கள் வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு ஒரு நபரிடமிருந்து 6 இலட்சம் ரூபாய் முதல் 14 இலட்சம் வரை பெற்றுக் கொண்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிதி மோசடிக்கு பலியாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்