
தமிழக மீனவ படகோட்டிகள் மூவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை யாழ் மேல் நீதிமன்றினால் இரத்து
-யாழ் நிருபர்-
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகோட்டிகள் மூவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் கடற்பரப்பிற்குள் பெப்ரவரி மாதம் 12 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களில், படகோட்டிகள் என்ற அடிப்படையில் மூவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றினால் 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த மீனவர்கள் சட்டத்தரணி அ.நிரோசன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தனர்.
மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டி.எவ்.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே மூவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர் செய்து விடுவிக்குமாறு நீதிபதியினால் உத்தரவிடப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
